இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜூன் 25 மற்றும் 26 ஆகிய இரு தினங்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வருடத்தில் இதுவரை நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 51,049 ஆக அதிகரித்துள்ளது. இதில் கவலைக்குரிய விடயம் என்னவெனில், நடப்பு ஜூன் மாதத்தில் மாத்திரம் 17,208 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேல், தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் கிழக்கு ஆகிய 5 மாகாணங்களிலிருந்தே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய, நாடு முழுவதிலும் உள்ள அதிக அவதானம் மிக்க சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்கள் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.
