கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 10,800,000 ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற நான்கு வெளிநாட்டு பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (01) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள “பசுமை வழித்தடம்” (Green Channel) ஊடாக இந்த சிகரெட் தொகையை கடத்திச் செல்ல முயன்ற போதே இவர்கள் சிக்கியுள்ளனர்.
விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 வயது மதிக்கத்தக்க சீன நாட்டு வர்த்தகர்கள் நால்வர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று அதிகாலை 12.30 மணியளவில் தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து ‘தாய் எயார்வேஸ்’ (Thai Airways) நிறுவனத்திற்கு சொந்தமான TG-307 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது, அவர்கள் கொண்டு வந்த 06 பயணப் பொதிகளை சோதனையிட்ட போது, சீனாவில் தயாரிக்கப்பட்ட 72,000 சிகரெட்டுகளை உள்ளடக்கிய 360 சிகரெட் கார்ட்டூன்கள் (Cartons) கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேகநபர்களை தடுப்புக் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
