கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், தாமதமாக வந்த பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2.2 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் 79 வயதுடைய ஸ்பெயின் நாட்டவர் ஒருவரை இலங்கை சுங்கத் திணைக்களம் கைது செய்துள்ளது.
சுங்கத் திணைக்களத்தின் தகவலின்படி, விவசாயப் பொறியியலாளரான சந்தேகநபர் ஜூலை 22ஆம் திகதி சியாரா லியோனிலிருந்து அடிஸ் அபாபா மற்றும் டோஹா ஊடாக கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் இலங்கை வந்துள்ளார்.
அவரது கைக்குடைமைப் பொதிகள் பரிசோதிக்கப்பட்டபோது சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டறியப்படவில்லை. எனினும், பதிவு செய்யப்பட்ட பயணப்பொதி தாமதமாக வந்ததால் தேவையான நடைமுறைகளை முடித்த பின்னர் அவர் விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர், ஜூலை 24ஆம் திகதி மாலை தனது தாமதமாக வந்த பயணப்பொதியைப் பெற மீண்டும் விமான நிலையத்திற்கு வந்தபோது, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் எக்ஸ்-ரே பரிசோதனை மேற்கொண்டதில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கண்டறியப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், இரண்டு கோப்பு உறைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு பொதிகளில் 2.198 கிலோகிராம் கொக்கெய்ன் மீட்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 109.9 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபரும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
