இலங்கையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளால் பாதிக்கப்பட்டு, பாதுகாப்பு இல்லங்களில் தங்கியிருந்த பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கான 15 மாத கால முன்னோடித் திட்டத்தின் இறுதி மதிப்பீட்டு முடிவுகள் நேற்று (2) வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகராலயத்தின் நிதி உதவியுடன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் ஆகிய அமைப்புகள் இணைந்து, “பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்தல்” திட்டத்தின் கீழ் இதனை முன்னெடுத்தன.
வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் மேல் மாகாணங்களை இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் பெண்களுக்குத் தொழில்சார் பயிற்சிகள் மற்றும் சுயதொழில் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டதோடு, பாதுகாப்பு இல்லப் பணியாளர்களின் திறன் மேம்பாடும் உறுதி செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் பங்கேற்ற கனடா உயர்ஸ்தானிகராலயத்தின் ஒத்துழைப்புக்கான தலைவர் கிரில் இயோர்டனோவ் குறிப்பிடுகையில்,
இலங்கையிலும் உலகளவிலும் பாலின சமத்துவத்தை மேம்படுத்த கனடா உறுதியுடன் உள்ளது. பெண்களுக்குப் பாதுகாப்பு, சுயதிறன்கள் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் கிடைக்கும்போது, அவர்களால் தங்களது வாழ்க்கையை கண்ணியத்துடனும் நம்பிக்கையுடனும் மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்பதை இந்த முடிவுகள் காட்டுகின்றன. பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறைகளை வலுப்படுத்த ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் மற்றும் இலங்கை நிறுவனங்களுடன் இணைவதில் பெருமையடைகிறோம்” என்றார்.
முறையான கண்காணிப்புக் கட்டமைப்பின் மூலம் இத்திட்டத்தின் நீண்டகாலத் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.
