காவத்தை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட நீலகாமம் பகுதியில் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் அடக்குமுறைகள் தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், காவத்தை பெருந்தோட்ட நிறுவனத்தின் முதன்மை செயற்பாட்டு அதிகாரிக்கு நேற்று தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தனது கண்டனத்தைத் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக மனோ எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
காவத்தை பெருந்தோட்டப் பகுதிகளில் கடந்த பத்து வருடங்களாகப் பாதுகாப்புப் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். கள்ளச் சுரங்கம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு இவர்கள் அங்குள்ள தொழிலாளர்களை அச்சுறுத்துவதையும், உடல் ரீதியாகத் தாக்குவதையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பொலிஸார் அல்லது சிவில் அதிகாரிகளுக்குரிய கடமைகளை இத்தகைய தனியார் பாதுகாப்புப் பிரிவினர் கையில் எடுப்பது சட்டவிரோதமானது. சமீபத்தில் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி நாடெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோட்ட நிலங்கள் எதுவும் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை அல்ல. அவை நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட அரச காணிகளே ஆகும். தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், பயிர் செய்யப்படாத காணிகளை மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் மக்கள் ஆணையைப் பெற்றுள்ளது.
200 வருடங்களாக இந்தத் தோட்டங்களை உருவாக்கி உழைத்த மக்களுக்கு அங்கு வாழும் உரிமை உண்டு. தேயிலை அல்லது ரப்பர் கைத்தொழிலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காகக் காணிகளைப் பயன்படுத்துவதை எவரும் தடுக்க முடியாது.
எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது, காவத்தை தோட்ட நிர்வாகத்தின் பெயரையும் அதன் அதிகாரிகளின் பெயரையும் குறிப்பிட்டு இந்த அராஜகங்களைச் சபையில் பகிரங்கப்படுத்துவேன்.
தொழிலாளர்களை அடிமைகளாக நடத்தும் காலம் முடிந்துவிட்டது என்பதை நிர்வாகம் புரிந்து கொள்ள வேண்டும். நிர்வாகத்தின் நோக்கம் சரியாக இருந்தாலும் மக்களைத் தாக்கும் விதம் முற்றிலும் தவறானது. நிர்வாகத்தின் அடக்குமுறைகளால் கொதிப்படைந்துள்ள தோட்ட இளைஞர்கள், எதிர்வரும் 5 ஆம் திகதி கொழும்பில் பாரிய போராட்டங்களை முன்னெடுக்கத் தயாராகி வருகின்றனர்.
இவை அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகள் என்பதையும் குத்தகை அடிப்படையிலேயே நாம் நிர்வகிப்பதையும் ஏற்கிறேன். அரசாங்கம் முறையாக ஒரு கொள்கை முடிவை எடுத்து இந்தக் காணிகளை மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
ஆனால் அத்துமீறல்கள் நிகழும்போது குத்தகை ஒப்பந்தத்தின்படி நிலத்தைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது. தோட்டத்தில் பரம்பரை பரம்பரையாக வேலை செய்யும் தொழிலாளர்கள் மீது எமக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை.
வேலை செய்யாத வெளிநபர்களே இத்தகைய குழப்பங்களை விளைவிக்கின்றனர். மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் குறித்து உரிய கவனம் செலுத்துகின்றேன் குறிப்பிட்டார்.
