களு கங்கையின் உப-அடைப்பு பகுதியான குடா கங்கையின் மேல்மட்ட பகுதிகளில் தற்போது குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சி பதிவாகி வருவதால், அடுத்த 48 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் வகையில் சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர்மானி தரவுப் பகுப்பாய்வுகளின் அடிப்படையில் மஞ்சள் நிற (Amber) அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இது நாளை ஞாயிற்றுக்கிழமை (17) காலை 8 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்களாக புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவு, மதுராவல பிரதேச செயலகப் பிரிவு மற்றும் பாலிந்த நுவர பிரதேச செயலகப் பிரிவு போன்ற பகுதிகளில் குடா கங்கை மற்றும் மகுரா கங்கையின் கரையோரங்களைத் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், குடா கங்கை மற்றும் மகுரா கங்கையைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகள் ஊடாகச் செல்லும் வீதிகள் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் வாகனச் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும், மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
