கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகண்டாவில் தீவிரமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை விடவும், அதன் பரவல் வேகம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
இந்த தொற்றினால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 220 ஆக உயர்ந்துள்ளது.
ஆப்பிரிக்க ஒன்றியம் (African Union) நடத்திய இணையவழி மாநாட்டில் உரையாற்றிய உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசுஸ் (Tedros Adhanom Ghebreyesus) பின்வரும் விபரங்களை வெளியிட்டுள்ளார்.
எபோலா தொற்றாளர்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, தற்போது நிலைமையைக் கையாள்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
நிலைமை சீரடைவதற்கு முன்னர் மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது.
கொங்கோவின் அண்டை நாடுகள் இந்தத் தொற்றுப் பரவல் காரணமாக அதிக ஆபத்துள்ள மண்டலங்களாகக் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவை உடனடியாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உகண்டாவில் மேலும் இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு பாதிப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
கொங்கோவின் இத்தூரி (Ituri) மற்றும் வடக்கு கிவு (North Kivu) மாகாணங்களில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் மற்றும் இந்தத் தீவிர ‘Bundibugyo’ வைரஸ் வகைக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் இதுவரை இல்லாதிருப்பது தொற்றைக் கட்டுப்படுத்துவதில் பெரும் சவாலாக அமைந்துள்ளது.
நிலைமைகளை நேரில் ஆராய்வதற்காக உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரெட்ரோஸ் அதானோம் மற்றும் அவசர சுகாதாரப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி சிக்வே இஹேக்வாசு (Chikwe Ihekweazu) ஆகியோர் செவ்வாய்க்கிழமை காங்கோவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
சர்வதேச அளவில் கவலைக்குரிய பொதுச் சுகாதார அவசரநிலையாக (PHEIC) இந்த எபோலா பரவலை உலக சுகாதார அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
