கண்டி – பகிரவகந்த பகுதியில் 15 வயது மற்றும் 10 மாதங்கள் மதிக்கத்தக்க சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேரர் ஒருவரும், அவருக்கு உடந்தையாக இருந்த பெண்ணொருவரும் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையின் சகோதரரான தேரரே இந்த துஷ்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக கண்டி பொலிஸார் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில் கடந்த 20ஆம் திகதி பகிரவகந்த பகுதியில் சந்தேகநபரான தேரர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பகிரவகந்த பகுதியில் உள்ள விகாரையொன்றில் தங்கியிருக்கும் 25 வயதுடைய தேரர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்த துஷ்பிரயோகச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 29 வயதுடைய பெண்ணொருவரும் கண்டி பொலிஸாரால் அன்றைய தினமே பகிரவகந்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான தேரரும், பெண்ணும் கடந்த 21ஆம் திகதி கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, சந்தேகநபரான தேரரை இன்றையதினம் ஜுன் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன், கைது செய்யப்பட்ட பெண் தலா 02 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கண்டி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
