மட்டக்களப்பு விடுதி ஒன்றில் தீ பற்றி உயிரிழந்த இரு குழந்தைகள் தொடர்பான சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபருக்கு, பிணை வழங்கப்பட்ட போதிலும், குறித்த நபரை பிணையிலெடுக்க எவரும் முன்வராத நிலையில், எதிர்வரும் 12ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று திங்கட்கிழமை (1) உத்தரவிட்டார்
மட்டு – திருகோணமலை வீதியில் உள்ள விடுதியின் அறையில் தங்கியிருந்த இரு குழந்தைகள் கடந்த மே 27 ம் திகதி புதன்கிழமை மாலையில் கட்டில் மெத்தை தீப்பற்றி எரிந்ததில் இரு குழந்தைகளும் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து குழந்தைகளின் தந்தை மே 28 ம் திகதி வியாழக்கிழமை இரவு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. தாய்க்கு புற்றுநோய் என பொய் கூறி தந்தையார் போலி அடையாள அட்டையை பயன்படுத்தி பிள்ளைகளை வைத்து பிச்சை எடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்தது.
அதேவேளை மட்டு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்ட இரு சிறுவர்களது பிரேத பரிசோதனையில் முக்கிய தடயங்களை அரச பகுப்பாய்வுக்கு அனுப்பியதுடன், சடலத்தை குழந்தைகளின் தாயாரிடம் மே 30ம் திகதி ஒப்படைக்கப்பட்டதையடுத்து, சடலத்தை தாயார் அவரது சொந்த இடமான மாத்தறை பிரதேசத்திற்கு கொண் டுசென்றுள்ளார்.
இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த குழந்தைகளின் தந்தையாரை நேற்று முதலாம் திகதி திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய வேளை, அவரை குழந்தைகளின் இறுதிக் கிரியைகளுக்காக சரீரப் பிணையில் நீதவான் விடுவித்த போதும், பிணை எடுப்பதற்கு எவரும் முன்வராத நிலையில், எதிர்வரும் 12ம் திகதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை குறித்த இரு குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்படவில்லை என பொலிசார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
இருந்த போதும் குறித்த நபர் 2020ம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டதாக அவர்களது திருமண பதிவில் தெரிய வந்துள்ளதுடன் அவர்களது மூத்த பிள்ளைக்கு 8 வயது என குறிப்பிடப்பட்டுள்ளது பொலிசாருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதையடுத்து இந்த 3 பிள்ளைகளும் இவர்களது பிள்ளைகளா? என்ற கோணத்தில் விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை கைது செய்யப்பட்ட உயிரிழந்த இரு குழந்தைகளின் தந்தைக்கு நீர்கொழும்பில் உள்ள பிரபல போதை பொருள் கடத்தல் வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளதாக புலனாய்வு பிரிவினர் கண்டறிந்து கொண்டனர் இது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
