பெற்றோர்களை கவனிக்காமல் விடும் பிள்ளைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பெற்றோரின் சொத்துக்களை தங்களது பெயருக்கு மாற்றிக்கொண்டு, பின்னர் அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து கைவிடும் பிள்ளைகளின் சொத்துக்களை அரசாங்கம் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தேசிய செயலகத்தின் பணிப்பாளர் சதுர மிகிந்தூன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் சொத்துகளின் பின்னர் அந்த பெற்றோரின் பராமரிப்பு பொறுப்பை அரசு ஏற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவை தற்போது சட்ட வரைவுத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சில பிள்ளைகள் பெற்றோரின் சொத்துக்களை தந்திரமாக தங்களது பெயருக்கு மாற்றிக் கொண்டு பின்னர் அவர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி கைவிடும் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அதனை அடிப்படையாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் விளக்கினார்.
இந்த சட்ட திருத்தங்கள் அமலுக்கு வந்த பிறகு பெற்றோர்களை கைவிடும் பிள்ளைகளுக்கு எந்தவித வாய்ப்பும் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பெற்றோரின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்யும் அவசரத் திட்டம் ஒன்றையும் அரசு நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
