மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கலாசார மரபும் பல்லுயிர் வளமும் நிறைந்த முக்கிய இடங்களை முன்னிறுத்தும் வகையில் புதிய சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் ஒன்று வடிவமைக்கப்பட்டு வருகிறது.
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபேகோன் தலைமையில், ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் தேசிய திட்ட முகாமையாளர் அசோக அஜந்தா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் அண்மையில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது திட்டம் தொடர்பான விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
மத்திய மாகாண சபையால் தெரிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா இடங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளை, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) மற்றும் சுற்றுலாத்துறை திணைக்களம் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மினிப்பே, பன்வில, உடுதும்பர, மெததும்பர, தம்புள்ளை, அம்பகமுவ, நோர்வூட், லகுகல-பல்லேகம மற்றும் மஸ்கெலியா ஆகிய பகுதிகள் சுற்றுலாத் தலங்களாக அபிவிருத்தி செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
மத்திய மாகாணத்தின் மூன்று வலயங்களையும் உள்ளடக்கும் இந்தத் திட்டம், சுற்றுலாத்துறையின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும், திட்டத்தின் விளம்பர மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் உள்ளூராட்சி அமைப்புகளும் முக்கிய பங்களிப்பை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
