யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் தங்கம் கடத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் சுமார் 26 பேரின் பயணம் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, இந்திய பிரஜைகள் இருவரிடமிருந்து தலா 100 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சூரியன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் நாகப்பட்டினத்துக்குச் செல்லும் ‘சிவகங்கை’ பயணிகள் கப்பலில் பயணிக்க இருந்த இலங்கை மற்றும் இந்திய பிரஜைகளே இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். கைது செய்யப்பட்டவர்களில் 9 இலங்கையர்கள் மற்றும் 17 இந்திய பிரஜைகள் அடங்குகின்றனர்.
சந்தேக நபர்கள் தங்கத்தை உடலுக்குள் மறைத்து வைத்துள்ளார்களா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர்.
சுங்க அதிகாரிகளின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்-ரே பரிசோதனையின் பின்னர், 17 பேருக்கு மேலதிகமாக ஸ்கானிங் பரிசோதனையும் நடத்தப்பட்டது. அதில் நான்கு பேர் தங்கத்தை விழுங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மீதமுள்ளவர்களுக்கு மீண்டும் எக்ஸ்-ரே மற்றும் ஸ்கானிங் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
