உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை முழுமையான நீதி கிடைக்கவில்லை எனக் கூறி, மட்டக்களப்பில் இன்று (18) காலை மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் (ESDO) ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
கடந்த காலங்களில் நடைபெற்ற தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மைகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். மேலும், தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் விசாரணை முறைகள் சுதந்திரமாகவும், நீதியான முறையிலும் நடைபெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
சில அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணைகளை மூடிமறைக்க முயல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் அவர்கள் முன்வைத்தனர். எந்தவித அரசியல் அல்லது மத அழுத்தங்களும் இன்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்துடன், விசாரணை தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்படாமல் இருப்பதற்காக சில நபர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உளவியல் பாதிப்புகளை மீட்டெடுக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.
மேலும், சந்தேகத்தின் பேரில் நீண்டகாலமாக சிறையில் உள்ள அப்பாவி இளைஞர்களின் விடுதலை மற்றும் நியாயமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
உண்மையான நீதி கிடைக்கும் வரை போராட்டங்களை தொடர்வோம் என சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்தன.
