இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரத்திற்கும் இலங்கையின் கொழும்பிற்கும் இடையிலான புதிய நேரடி விமான சேவை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை சுமார் எட்டு மணிநேரம் எடுத்த பயண நேரம் மூன்று மணிநேரமாகக் குறையவுள்ளது.
FitsAir விமான நிறுவனம் வாரத்திற்கு மூன்று நாட்கள் இந்த சேவையை இயக்கவுள்ளது. கடந்த காலங்களில் பல முயற்சிகள் வெற்றியளிக்காத நிலையில், அகமதாபாத் மற்றும் கொழும்பு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள முதல் நேரடி விமான இணைப்பு இதுவாகும்.
இந்த புதிய சேவையை நடைமுறைப்படுத்துவதில் Cinnamon Hotels மற்றும் Walkers Tours நிறுவனங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. இந்தியா மற்றும் இலங்கை இடையிலான சுற்றுலா மற்றும் பயணத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் முன்னோடியான முயற்சியாக இது கருதப்படுகிறது.
சுற்றுலாத்துறை அதிகாரிகளின் தகவலின்படி, இலங்கைக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாடாக இந்தியா தொடர்ந்தும் முன்னிலையில் உள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட Cinnamon Hotels & Resorts நிறுவனத்தின் கமல் முனசிங்க, கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து சுமார் ஐந்து இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்ததாகவும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுடன் நேரடி விமான இணைப்புகள் இருந்தபோதிலும், அகமதாபாத் நகரம் இதுவரை முழுமையாக பயன்படுத்தப்படாத சந்தையாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
குஜராத் மாநிலத்தின் வலுவான பயண முகவர் வலையமைப்பும், வெளிநாட்டு சுற்றுலாவிற்கான அதிகரித்து வரும் ஆர்வமும், இலங்கை சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகளில் அந்த மாநிலத்தை முக்கிய இலக்காக மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த புதிய விமான இணைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில், இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் Sanath Jayasuriya தொடக்க விமான சேவை அறிமுக நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.
