தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பிறந்துள்ள இரண்டு சிங்கக் குட்டிகளை மிக அருகில் இருந்து பார்வையிடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட வாய்ப்பு இன்றுடன் (21) நிறைவடைவதாக தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
விளையாட்டுத்தனமாக துள்ளித் திரியும் இந்த சிங்கக் குட்டிகளை நேரில் கண்டு ரசிப்பதற்கும், அவற்றை அண்மையில் இருந்து பார்வையிடும் அரிய அனுபவத்தைப் பெறுவதற்கும் கடந்த சில வாரங்களாக ஆயிரக்கணக்கானோர் மிருகக்காட்சிசாலைக்கு வருகை தந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த விசேட ஏற்பாடுகள் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், சிங்கக் குட்டிகளை மிக அருகில் இருந்து காண விரும்பும் விலங்கு நேயர்களும் குடும்பங்களும் இந்த இறுதி நாளை பயன்படுத்தி மிருகக்காட்சிசாலைக்கு வருகை தருமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
