இணையவழி பணப்பரிமாற்ற சேவைகளை பயன்படுத்தி வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பி போதைப்பொருள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் இருவர், பெருமளவு போதைப்பொருட்களுடன் நீர்கொழும்பு கட்டுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸ மற்றும் உடுகம்பொல பகுதிகளைச் சேர்ந்த 29 மற்றும் 31 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு பிரதேச குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனையின் போது அவர்களிடமிருந்து 1 கிலோகிராம் 34 கிராம் ஹஷிஷ் போதைப்பொருள், 7 கிராம் 420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 8 கிராம் 860 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 351,200 ரூபாய் பணமும், கடத்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு சொகுசு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
