வவுனியா நகரிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் உயர்தர மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட அனுமதியற்ற வாகனப் பேரணியின் போது, போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ஒரு மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலை மாணவர்கள், வவுனியா புகையிரத நிலைய வீதியில் ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களுடன் பேரணியை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, மாணவர்கள் குழுவாகச் சென்று வீதியின் இயல்பான போக்குவரத்தை பாதிக்கும் வகையில் செயல்பட்டதுடன், பிற வாகனங்களும் பொதுமக்களும் பயணிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், சில அதிவேக மோட்டார் சைக்கிள்களில் அதிக இரைச்சலை ஏற்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்கள் பொருத்தப்பட்டிருந்ததோடு, சிலர் ஆபத்தான முறையில் வேகமாக வாகனங்களை இயக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று பேரணியை தடுத்து நிறுத்தினர்.
அதன்பின், பொதுவீதியில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தல், வாகனங்களின் அசல் வடிவமைப்பை அனுமதியின்றி மாற்றியமைத்தல், ஒலி மாசு ஏற்படுத்தல் மற்றும் ஆபத்தான வேகத்தில் வாகனம் செலுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சோதனை நடவடிக்கையின் போது விதிமுறைகளை கடுமையாக மீறியதாகக் கூறப்படும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு வவுனியா பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து சட்டங்களை மீறியதாக அடையாளம் காணப்பட்ட பல மாணவர்களுக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
