தொலைபேசி கோபுரங்களின் Cables வெட்டித் திருடிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த இரு சந்தேக நபர்கள் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (13) மாலை ராகம போலீஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 17 கிராம் 700 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், அவர்கள் இப்பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களில் இருந்து சுமார் 922,750 ரூபாய் பெறுமதியான Cables வெட்டித் திருடியுள்ளமை அம்பலமாகியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 34 வயதுடைய ரத்துபஸ்வல மற்றும் கடவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர்களால் திருடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த தொலைபேசி Cables ஒரு பகுதி போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ராகம போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
