ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பணிகளுக்காகப் புறப்பட்டுச் செல்லும் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக இன்று (26) முற்பகல் பனாகொடையிலுள்ள இலங்கை காலாட்படைப் பிரிவு தலைமையகத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க விஜயம் மேற்கொடுள்ளார்.

இதன்போது ஊடகவியலாளர்களை சந்தித்த ஜனாதிபதி,
அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக இலங்கையிலிருந்து ஒரே தடவையில் அதிகளவிலான படையினர் இம்முறை புறப்பட்டுச் செல்லவுள்ளதுடன், அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்குக் கிடைத்த வாய்ப்பை பெரும் கௌரவமாகக் கருதுகிறேன் என குறிப்பிட்டார்.

உலகில் எங்கு இருந்தாலும், பாதிப்புக்குள்ளான மக்களின் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கத் தயாராகவுள்ள இராணுவம் நம்மிடம் உள்ளது என்பதை இதன்மூலம் உலகிற்கு எடுத்துரைப்பதுடன், அது நாட்டிற்குப் பெரும் பெருமையையும் கௌரவத்தையும் சேர்க்கிறது என்பதை இங்கு சுட்டிக்காட்டியதுடன், நாம் உலகின் செல்வந்த நாடாக மாறுவது கடினமாக இருந்தாலும், உலகில் பெருமைமிக்க நாடாக மாற முடியும் என்பதையும் வலியுறுத்தினார்.

மேலும், உலக அமைதி காக்கும் படைப் பணிகளுக்காகப் புறப்பட்டுச் செல்லும் அனைவரும் தங்கள் தோள்களில் நாட்டின் பெருமையை சுமந்து செல்கிறார்கள் என்றும், தங்களது கடமையைச் சரியாக நிறைவேற்றி நாட்டின் பெருமையையும் கௌரவத்தையும் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவது அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.

