ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயலில் ஈடுபட்ட ஒருவரை இலங்கையிலிருந்து தப்பிச் செல்லச் செய்வதற்காக, மற்றொருவரின் பெயரில் போலி வெளிநாட்டு கடவுச்சீட்டை சட்டவிரோதமாக தயாரித்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் நேற்று (26) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வு பிரிவு மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர் 41 வயதுடையவர். இவர் ஜனாதிபதி செயலகத்தின் பாராளுமன்ற மற்றும் அமைச்சரவை விவகாரப் பிரிவில் மூத்த உதவி செயலாளராக பணியாற்றி வருவதுடன், கண்டி பகுதியைச் சேர்ந்தவரும் ஆவார்.
மேலும், இவர் முன்னர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வெளிநாட்டு தூதரகப் பிரிவில் பிரதிப் பொறுப்பாளராக பணியாற்றிய காலத்தில் குறித்த போலி கடவுச்சீட்டு தயாரிப்பு இடம்பெற்றதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வு, போக்குவரத்து, சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்பு பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவைப் பொறுப்பேற்றுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் சந்தன கொடிதுவக்கு மற்றும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்ச ஆகியோரின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் விளைவாக இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
