கதிர்காம ஆலய ஆடி வேல் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக, மலையகத்திலிருந்து பாத யாத்திரை செல்லும் முதலாவது பக்தர்கள் குழு நேற்று (04) பிற்பகல் மஸ்கெலியா நகரிலிருந்து தமது பாத யாத்திரை பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இரு பெண்கள் உட்பட 9 பேரைக் கொண்ட இக்குழுவினர், எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள கதிர்காம ஆலய ஆடி வேல் திருவிழாவின் காப்புக்கட்டும் நிகழ்வில் கலந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
மஸ்கெலியா, ஹட்டன், நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை, கும்பல்கம, ஹதே கனுவ, வெல்லவாய, எத்னாவல, குடாபெஹெர மற்றும் தனமல்வில ஊடாக சுமார் 280 கிலோமீற்றர் தூரத்தை இவர்கள் பாத யாத்திரை மூலம் கடக்கவுள்ளனர்.
நாளொன்றுக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரையான தூரத்தைக் கால்நடையாகக் கடக்கும் இக்குழுவினர், இரவு வேளைகளில் சமய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தங்குமிடங்களில் தங்கியிருந்து தமது பயணத்தைத் தொடரவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
