நாடளாவிய ரீதியில் 100 புகையிரத நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், 40 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட நாரஹேன்பிட்ட புகையிரத நிலையம் இன்று (06) மக்கள் பாவனைக்காகக் கையளிப்பு!
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில், இலங்கை புகையிரத திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ், “Clean Sri Lanka” திட்டத்தின் நிலையான செயற்திட்டமாக “Dream Destination” (கனவு இலக்கு) வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன்கீழ், முழுமையாக நவீனமயமாக்கப்பட்ட நாரஹேன்பிட்ட புகையிரத நிலையம் இன்று (06) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
தனியார் நிறுவனமான ‘MAGA’ கட்டுமான நிறுவனத்தினால் 40 மில்லியன் ரூபா நிதிப் பங்களிப்பில் இப்புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், புகையிரத பயணிகள் மேம்பாலம் புதிதாகக் கட்டப்பட்டுள்ளமை, இரண்டாவது பயணிகள் மேடை (Platform) நீடிக்கப்பட்டுள்ளமை, சுகாதார மற்றும் கழிவுநீர்க் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளமை, உள் மற்றும் வெளிப் பகுதிகளில் வர்ணம் பூசப்பட்டுள்ளமை ஆகிய பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், பயணிகளுக்கான புதிய ஆசனங்கள் பொருத்தப்பட்டுள்ளமை, புகையிரத உத்தியோகத்தர் விடுதிகள் பழுதுபார்க்கப்பட்டுள்ளமை, மின்விளக்குக் கட்டமைப்பு நவீனமயமாக்கப்பட்டுள்ளமை மற்றும் புகையிரத நிலையப் பிரவேச வீதி Carpet இட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளமை உள்ளிட்ட புகையிரத நிலைய மற்றும் அதனைச் சூழவுள்ள அனைத்துப் பௌதீகக் கட்டமைப்பு மறுசீரமைப்புகளும் இத்திட்டத்தின் கீழ் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
