உள்நாட்டுப் போர் முடிவடைந்து 16 ஆண்டுகளுக்கு மேலாகியும், தங்களது சொந்தக் காணிகள் 36 வருடங்களுக்கும் மேலாக விடுவிக்கப்படாததைக் கண்டித்து மயிலிட்டி மக்கள் நாளை (15)யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பாரிய மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
இப்போராட்டத்திற்குத் தங்களது காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் பூரண ஆதரவை வழங்கும் என அதன் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த ஆதரவை வெளியிட்டதுடன், அனைத்துப் பொது அமைப்புகளையும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அவசர அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் மட்டுமன்றி, முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு,ஆண்டாங்குளம் ஆகிய பகுதிகளிலிருந்து கடந்த டிசம்பர் 1984 இல் இடம்பெயர்ந்த குடும்பங்களின் காணிகளும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.
அவர்கள் சுமார் 42 வருடங்களாகத் தங்களது சொந்த நிலங்களில் மீள்குடியேற முடியாமல் தவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
