தங்காலை சியம்பலாகொட பகுதியில் உள்ள வீடொன்றின் முன்பாக, படுகொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முதியவர் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை (11) மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பெலியத்த, சியம்பலாகொட, திகங்வல பகுதியைச் சேர்ந்த கங்கானம் ஆரச்சிகே தனபால என்ற 88 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
இவ்வதிகாரி தனது மனைவியுடன் மாத்திரம் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையிலேயே, நேற்று (11) இரவு 8.00 மணியளவில் வீட்டின் முன்னாலுள்ள தண்ணீர் குழாய்க்கு அருகில் அவர் இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதை உறவினர்கள் அவதானித்துள்ளனர்.
மீட்கப்பட்ட முதியவரின் சடலத்தில் பல வெட்டுக்காயங்கள் காணப்பட்டுள்ளதுடன், அவர் விழுந்து கிடந்த இடத்திலும் முகத்திலும் பலத்த இரத்தக் கறைகள் காணப்பட்டுள்ளன. இதனால் இவர் யாரோ ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த முதியவரின் இளைய மகனான 48 வயதுடைய நபர் ஒருவர் தங்காலை தலைமையகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ஓய்வுபெற்ற கடற்படைச் சிப்பாய் என்பதுடன், அவர் நேற்று (11) காலை 11.00 மணியளவில் தந்தையின் வீட்டிற்கு வந்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் அவர் கைது செய்யப்படும் போது கடுமையான மதுபோதையில் இருந்ததாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தங்காலை கோட்ட தடயவியல் குற்றப் புலனாய்வுப் பிரிவின் (SOCO) அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து முதற்கட்ட விசாரணைகளையும் சோதனைகளையும் நடத்தியுள்ளனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தங்காலை தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
