யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டைபகுதியில் நேற்றைய தினம் (11) வியாபார நடவடிக்கைகளுக்காகச் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தி, அவரிடமிருந்த ஒருதொகை பணம் இருவரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
பாதிக்கப்பட்ட முதியவர் நேற்றைய தினம் (11) சக்கரத்தையிலிருந்து நவாலி நோக்கிச் செல்லும் வீதியூடாகத் தனது வியாபாரப் பணிகளுக்காகச் சென்று கொண்டிருந்த வேளை, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முதியவரை வழிமறித்து, திடீரென அவர் மீது தாக்குதல் நடத்தி வியாபாரத்திற்காகத் அவர் வைத்திருந்த ஒருதொகை பணத்தைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற வீதிக்கு அருகிலுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடீவி பாதுகாப்பு கேமராக்களில் இக்காட்சிகள் பதிவாகியிருக்கக்கூடும் எனப் பாதிக்கப்பட்ட முதியவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்குத் உத்தியோகபூர்வமாகத் தெரியப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சிசிடீவி காட்சிகளின் உதவிகளுடன் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
