இரத்தினபுரி, கலவானை தமிழ் வித்தியாலயத்தில் 300 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப (IT) வகுப்பறை நேற்று (15.07.2026) பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
இரத்தினபுரி மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசத்தில் அமைந்துள்ள கலவானை தமிழ் வித்தியாலய மாணவர்களின் கல்வி தேவையை கருத்தில் கொண்டு இந்த புதிய கணினி வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
திறப்பு நிகழ்வில் உரையாற்றிய பிரதியமைச்சர், இவ்வாறான பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்கள் மிகவும் மதிப்புக்குரியவர்கள் என தெரிவித்ததுடன், குறைந்த வளங்களுக்கிடையிலும் பாடசாலையை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய முக்கிய கருவி கல்வியே எனவும், கல்வியில் கவனம் செலுத்தி முன்னேற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் கலவானை பிரதேச சபை உப தலைவர், பிரதேச சபை உறுப்பினர்கள், வலயக் கல்வி அதிகாரிகள், உதவி கல்வி அதிகாரிகள், அருகிலுள்ள பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

