ராகம – கந்தானை வீதியில் வல்பொல ரயில் மார்க்கத்தில் அருகில் இடம்பெற்ற வீதி விபத்தில் 8 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை (22) வல்பொல விகாரைப் பக்கத்திலிருந்து வல்பொல ரயில் நிலையத்தை நோக்கிப் பயணித்த கழிவுகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதன்போது, ரயில் மார்க்கத்தில் பாதுகாப்பு வாயில் மூடப்பட்டிருந்த நிலையில், அங்கு வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த 2 கார்கள் மற்றும் ஒரு லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்தின் போது வீதியோரமாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் ஆகிய மூவரும் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 8 வயதுச் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய மற்றைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கழிவுகளை ஏற்றி வந்த லொறியின் சாரதிக்குத் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
