முன்னாள் அரச புலனாய்வு சேவைப் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள மனுவுடன் தொடர்புடைய இடையீட்டு மனுக்களை ஆகஸ்ட் 4 மற்றும் 6 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் (CID) தன்னை கைது செய்து தடுத்து வைத்தமைக்கு எதிராக சுரேஷ் சலே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், வணக்கத்திற்குரிய பெங்கமுவே நாலக தேரர் மற்றும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட எட்டு தரப்பினர், வழக்கில் தங்களது கருத்துக்களை முன்வைக்க அனுமதி கோரி இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தனவின் சமர்ப்பணங்கள் நிறைவடைந்த பின்னர், இடையீட்டு மனுக்கள் தொடர்பில் பரிசீலிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளின் இணக்கத்துடன், குறித்த மனுக்களை ஆகஸ்ட் 4 மற்றும் 6 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
