உடலுக்குள் இரகசியமாக கொக்கெய்ன் போதைப்பொருள் காப்சூல்களை மறைத்து இலங்கைக்குள் கடத்த முயன்ற 54 வயதுடைய அங்கோலா நாட்டுப் பெண் ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்கப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அங்கோலாவிலிருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா மற்றும் கட்டார் நாட்டின் தோஹா ஊடாக கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அவர் விமான நிலையத்தில் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுங்க அதிகாரிகளின் விசாரணையின்போது, தனது உடலுக்குள் மறைத்து வைத்திருந்த கொக்கெய்ன் அடங்கிய 14 காப்சூல்களை அவர் தாமாகவே ஒப்படைத்துள்ளார். மேலும், இதற்கு மேலாக பல காப்சூல்களை விழுங்கியுள்ளதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
மீட்கப்பட்ட 14 காப்சூல்களில் சுமார் 237 கிராம் கொக்கெய்ன் இருந்ததாகவும், அவற்றின் சந்தை மதிப்பு சுமார் 10 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், அவரது உடலுக்குள் உள்ளதாக சந்தேகிக்கப்படும் ஏனைய காப்சூல்களை பாதுகாப்பாக அகற்றுவதற்கான மருத்துவ நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
