கொங்கோ ஜனநாயகக் குடியரசில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றைத் தொடர்ந்து, கடந்த 21 நாட்களுக்குள் கொங்கோவிற்கு பயணம் செய்த வெளிநாட்டவர்களுக்கு கனடா தற்காலிக நுழைவுத் தடை விதித்துள்ளது.
இந்த உத்தரவு இன்று (20) இரவு 11.59 மணி முதல் அமுலுக்கு வருவதுடன், எதிர்வரும் ஆகஸ்ட் 29ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.
இதன்படி, கொங்கோவிலிருந்து திரும்பிய வெளிநாட்டுப் பயணிகளை வணிக மற்றும் தனியார் விமானங்களில் கனடாவிற்கு அழைத்துச் செல்ல விமான நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், கனடியக் குடிமக்கள், நிரந்தர வதிவிட உரிமையாளர்கள் மற்றும் பழங்குடியினருக்கு இந்தத் தடையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் நாட்டை வந்தடைந்ததும் கட்டாயமாக 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.
இதேவேளை, பயணத் தடைகள் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் வரம்பான பயனையே அளிக்கும் என்றும், அவை சமூக ஒதுக்கலை அதிகரிக்கக்கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
கொங்கோவில் இதுவரை 2,100-க்கும் மேற்பட்ட எபோலா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 828-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
