இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கலாசார விழாக்களில் ஒன்றான கண்டி எசல பெரஹரையின் வரலாற்று, கலாசார மற்றும் பாரம்பரிய அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் (WIPO) “Promoting Festival Tourism Development through Intellectual Property” எனும் திட்டத்துடன் இணைந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. கலாசார விழாக்களின் பாரம்பரியத்தையும் மரபுகளையும் பாதுகாத்தபடி, சுற்றுலா வளர்ச்சிக்காக அறிவுசார் சொத்துரிமைகளைப் பயன்படுத்தும் திறனை மேம்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
நூற்றாண்டுகள் பழமையான கலை மரபுகளும் பாரம்பரிய அறிவும் நிறைந்த கண்டி எசல பெரஹரை, இந்தத் திட்டத்தின் கீழ் முன்மொழிய ஏற்ற விழாவாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதன்படி, விழாவின் தனித்துவமான அடையாளத்தைப் பாதுகாக்க பதிப்புரிமை (Copyright) மற்றும் வர்த்தகமுத்திரை (Trademark) மற்றும் பிராண்டிங் (Branding) ஆகியவற்றுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டத்திற்கான முன்மொழிவை தயாரித்து சமர்ப்பிப்பதற்காக, வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் முன்வைத்த பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தப் பணிகள் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரின் இணைத் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு, திட்டத்தின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்யவுள்ளது. இதன் மூலம் விழா சுற்றுலாவை வலுப்படுத்துவதுடன், இலங்கையின் கலாசார பாரம்பரியத்தை சர்வதேச அளவில் பாதுகாக்கும் முயற்சிகளும் மேலும் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
