பாதாள உலகக் குழுத் தலைவரும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் கஞ்சிபானை இம்ரானை கைது செய்வதற்காக மலேசிய பொலிஸார், சர்வதேச பொலிஸார் மற்றும் இலங்கை பொலிஸார் இணைந்து தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்து வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் கஞ்சிபானை இம்ரானை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் நடவடிக்கைகளையும் மலேசிய அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், மலேசியாவிலிருந்து தப்பிச் செல்ல முடியாத வகையில் விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் கடல் மார்க்கங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய ஆதரவாளரான ரத்மலானை சைமா உள்ளிட்ட மூவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கஞ்சிபானை இம்ரானின் வலையமைப்பு தொடர்பான முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகளின் பின்னர், கஞ்சிபானை இம்ரான் தங்கியிருந்த இடத்தை விட்டு வேறு பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேகநபரை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
