மட்டக்களப்பில், முகநூல் மூலம் மூன்று நாட்களில் நண்பனான லண்டனைச் சேர்ந்த வெளிநாட்டு வைத்தியர் என தன்னை அறிமுகப்படுத்திய நபரின் மோசடியில் சிக்கி, பெண் ஒருவர் ரூ.8 இலட்சத்து 37 ஆயிரம் பணத்தை இழந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, குறித்த பெண்ணுக்கு கடந்த 13ஆம் திகதி “டான்” என்ற பெயரில் தன்னை லண்டனில் பணிபுரியும் வைத்தியர் என அறிமுகப்படுத்திய நபர் முகநூல் மூலம் நட்பை ஏற்படுத்தி தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார்.
பின்னர், கடந்த 16ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பொதிகளை விநியோகிக்கும் நிறுவனம் எனக் கூறி தொலைபேசியில் தொடர்புகொண்ட மர்மநபர், லண்டனில் இருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் அடங்கிய பார்சல் வந்துள்ளதாகவும், அதை சுங்கத் திணைக்களத்தில் இருந்து விடுவிக்க முதலில் ரூ.87,000 செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதை நம்பிய பெண், முதலில் ரூ.87,000 செலுத்தியதுடன், பின்னர் மேலும் ரூ.3 இலட்சம் அனுப்பியுள்ளார். தொடர்ந்து பார்சலை விடுவிக்க வேண்டும் எனக் கூறி, அவரது தாயாரும் ரூ.3 இலட்சத்து 50 ஆயிரம் செலுத்தியுள்ளார். அதன் பின்னரும் மேலும் ரூ.1 இலட்சம் அனுப்பிய நிலையில், மீண்டும் ரூ.1.5 இலட்சம் கோரியபோது சந்தேகமடைந்த பெண் பணம் அனுப்ப மறுத்துள்ளார்.
அதன் பின்னர் குறித்த நபர்களை தொடர்புகொள்ள முயன்றபோது, அவர்களது தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இணைய மோசடி குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், சமூக வலைத்தளங்களில் தெரியாத நபர்களுடன் நட்பு ஏற்படுத்தி பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
