படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவின் தனுஷ்கோடிக்கு சென்றதாகக் கூறப்படும் இலங்கையர்கள் இருவரை இந்திய கடலோர பாதுகாப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்திய ஊடகங்களின் தகவலின்படி, கடலோர பாதுகாப்பு நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரை அதிகாரிகள் தடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வத்தளையைச் சேர்ந்த ஜி. விக்னேஸ்வரன் (31) மற்றும் எம். லூசிநாத் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விசாரணைகளில், வத்தளையில் வியாழக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களாக இவர்கள் இலங்கை அதிகாரிகளால் தேடப்பட்டு வந்தமை தெரியவந்துள்ளது. மேலும், போதைப்பொருள் தொடர்பான மூன்று வழக்குகளும் இவர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிகாரிகளின் கோரிக்கையின்படி, சந்தேகநபர்கள் திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்திலுள்ள விசேட முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு மீள ஒப்படைக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
