மலையக மக்களை வெறும் தோட்டத் தொழிலாளர்களாக மட்டுமே வைத்திருக்காமல், காணி உரிமையுடைய தோட்டத் தொழில்முனைவோராக மாற்றுவதே ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான இலக்காகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பலாங்கொடை பிரதேசத்தில் திங்கட்கிழமை (27) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசியல் கட்சிகளும் அரசாங்கங்களும் மலையக மக்களைத் தொடர்ந்து வெறும் தொழிலாளர்களாக மட்டுமே பார்த்து வரும் நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் அவர்களுக்குக் காணி உரிமை வழங்கி சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாகவும் தொழில்முனைவோராகவும் வலுவூட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டில் 60 சதவீத தேயிலைக் காணிகளைக் கொண்டுள்ள பெருந்தோட்ட நிறுவனங்கள் 30 சதவீத உற்பத்தியையே தருகின்றன் ஆனால் 40 சதவீத காணிகளைக் கொண்டுள்ள சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் 70 சதவீத உற்பத்தியைத் தருகின்றனர்.
பயன்பாட்டில் இல்லாத அரச மற்றும் தனியார் தரிசு நிலங்களை மலையக மக்களுக்குப் பகிர்ந்தளித்து, சொந்த வீடு மற்றும் காணி உரிமையுடன் அவர்களைச் சிறு தோட்ட உரிமையாளர்களாக்குவதே சம்பளப் பிரச்சினைக்கும் பொருளாதார உயர்வுக்குமான நிரந்தரத் தீர்வாகும்.
மலையகப் பகுதிகளில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் காணப்படும் பௌதீக மற்றும் மனிதவளப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்து, அப்பிரதேசங்களை ஒருங்கிணைந்த முறையில் அபிவிருத்தி செய்யத் எமது ஆட்சியில் சிறப்பு ஜனாதிபதி செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்படும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகள் உரித்தாக இருக்கும் நிலையில் (1889 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க இந்தியத் தோட்டத் தொழிலாளர் கட்டளைச் சட்டத்தின் கீழ்), தற்போதைய அரசாங்கம் சட்டவிரோதமான முறையில் மலையக மக்களைக் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றி வருகிறது.
பாதிக்கப்படும் மலையக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், இந்த அநீதிக்கு எதிராக நீதிமன்றங்களில் சட்டப் போராட்டம் நடத்தவும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பிரத்தியேக சட்டத்தரணிகள் குழுவொன்று நியமிக்கப்படும் என்றார்.
