இலங்கை அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முதன்மைஸ்தானம் வழங்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள மகா சங்கத்தினர், பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதும் போஷிப்பதும் அரசாங்கத்தின் அசைக்க முடியாத அரசியலமைப்புப் பொறுப்பாகும் என வலியுறுத்தி விசேட பிரகடனம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் பௌத்த சாசன பாதுகாப்புச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட மகா சங்க மாநாட்டின்போது, பிக்குகளின் சார்பில் கலகொட அத்தே ஞானசார தேரரினால் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மகா சங்க பிரகடனம் வாசிக்கப்பட்டது.
பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சம்புத்த சாசனத்தின் நீடித்த நிலைத்தன்மை மற்றும் தேசிய கலாசார அடையாளத்தைப் பாதுகாக்கும் நோக்கில், முப்பீடங்களையும் சாட்சியாக வைத்து தேசம், இனம் மற்றும் சமயத்திற்காக இந்த பிரகடனத்தை வெளியிடுகின்றோம்.
அரசியலமைப்பின் 9ஆவது பிரிவின்படி, பௌத்த மதத்துக்கு முதன்மைஸ்தானம் வழங்கப்பட்டுள்ளதுடன், சாசனத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கட்டாயக் கடமையாகும். அதேநேரம், அரசியலமைப்பின் 10 மற்றும் 14(1) பிரிவுகளின் கீழ் ஏனைய மதங்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ள மத சுதந்திரம் மற்றும் உரிமைகளையும் பாதுகாத்தே இதனை நிறைவேற்ற வேண்டும்.
பௌத்தத்துக்கு முதன்மை அளிப்பது பிற மதங்களுக்கு இழைக்கப்படும் அநீதி அல்ல. மாறாக நாட்டின் வரலாற்று மற்றும் கலாசார அடித்தளத்தை உறுதி செய்யும் அரச பொறுப்பாகும்.
பிக்குகளின் ஒழுக்கக் கட்டுப்பாடு மற்றும் விகாரை சார்ந்த சாசனச் சிக்கல்களுக்குத் தீர்வு காண சிறப்பு நடுவர் மன்றங்களைச் சட்டப்படி நிறுவுவதற்கு அரசியலமைப்பின் 105(4) பிரிவு இடமளிக்கிறது. சாசன விவகாரங்கள் அதன் பாரம்பரிய முறைகளுக்கு ஏற்பவே பாதுகாக்கப்பட வேண்டும்.
இதனடிப்படையில், சம்புத்த சாசனத்தைப் பாதுகாப்பதுடன், அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்களையும் மத உரிமைகளையும் மதிப்போம். பௌத்த தொல்பொருள் பாரம்பரியங்கள், விகாரைச் சொத்துக்கள் மற்றும் சாசன நிறுவனங்களைச் சட்டப்பூர்வமாகப் பாதுகாக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம். பௌத்த சாசனத்துக்கும் பிக்குகளுக்கும் எதிரான அவதூறுகள் மற்றும் சட்டவிரோதத் தலையீடுகள் குறித்துப் பட்சபாதமற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
பௌத்த அடையாளம், தொல்பொருள் பாரம்பரியம் மற்றும் பிக்குகளின் சமூகப் பங்களிப்பைப் பலவீனப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் எதிராகச் சட்டப்பூர்வமாகவும் ஜனநாயக வழியிலும் கிளர்ந்தெழ உறுதி பூணுகின்றோம். தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து எழுந்துள்ள அச்சங்கள் குறித்து சுயாதீனமாக விசாரித்து, அரசியலமைப்பின் 9 ஆவது பிரிவை நடைமுறையில் செயல்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம்.
இந்த பிரகடனமானது அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கையோ அல்லது தனிநபர் பலப்படுத்தும் கூற்றோ அல்ல. அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கான சாசன வேண்டுகோளாகும். எனவே, 9ஆவது பிரிவை வெறும் பெயரளவில் வைக்காமல், அரச கொள்கை மற்றும் சட்டப் பாதுகாப்பின் ஊடாக நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
