டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமற்ற சுங்க அறிவித்தல் முறைமை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி கொழும்பு SEMA கட்டிடத்தில் அமைந்துள்ள கேட்போர்கூடத்தில் நேற்று (28) பிற்பகல் நடைபெற்றது.
அரசின் பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் அரச சேவை நவீனமயமாக்கல் திட்டத்தின் முக்கிய அங்கமாக அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதை விரைவுபடுத்தி, காகிதமற்ற சுங்க அறிவித்தல் முறைமையை (Paperless Customs Declaration Processing System) அக்டோபர் 01 ஆம் திகதி முதல் அமல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக இங்கு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், உலகின் ஏனைய நாடுகளுடன் இணைந்து பயணிப்பதற்கு இத்தகைய டிஜிட்டல் மாற்றங்கள் அத்தியாவசியமானவை எனக் குறிப்பிட்டார். காகிதமற்ற சுங்க அறிவித்தல் முறைமையை அறிமுகப்படுத்துவதன் மூலம் சுங்கச் செயல்முறை (Customs Clearance) மிகவும் திறமையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், வேகமாகவும் மாறுவதோடு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்குப் பெரும் வசதியை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, டிஜிட்டல் கையொப்பமிட்ட பிறகு மேற்கொள்ளப்படும் மாற்றங்களை இம்முறைமை கண்டறிந்துவிடும் என்பதால், எவ்வித மோசடிகளுக்கோ ஊழல்களுக்கோ வாய்ப்பு இருக்காது என்றும் ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
வர்த்தக அளவு வேகமாக அதிகரித்து வரும் பின்னணியில், டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமற்ற முறையை அறிமுகப்படுத்துவதால் யாருடைய வேலையும் பறிபோகாது என்றும், தொழிலின் தன்மை மாறினாலும் சுங்கத் தரகர்களின் (Customs Clearance Agents) வேலைவாய்ப்புகள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் இங்கு தெளிவுபடுத்தினார்.
LankaSign டிஜிட்டல் கையொப்பம் மற்றும் ASYCUDA முறைமையை ஒன்றிணைப்பதன் மூலம் சட்டப்பூர்வமாகவும் பாதுகாப்பாகவும் அனைத்து சுங்க ஆவணங்களையும் இணைய வழியில் (Online) சமர்ப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும், இந்த முறைமையை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் வலியுறுத்தினார். அந்த ஒத்துழைப்பு கிடைத்தால் அக்டோபர் 01 ஆம் திகதி முதல் இந்த புதிய முறையை வெற்றிகரமாகத் தொடங்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், ASYCUDA முறைமையுடன் LankaSign டிஜிட்டல் கையொப்பத்தை ஒன்றிணைத்து காகிதமின்றி சுங்க ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் செயல்முறை, அதன் நன்மைகள் மற்றும் அமலாக்கம் குறித்து விரிவான விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கேள்வி-பதில் (Q&A) அமர்வில், கலந்துகொண்ட பிரதிநிதிகள் முன்வைத்த சிக்கல்கள் மற்றும் யோசனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதோடு, அதற்குரிய அதிகாரிகளால் தேவையான விளக்கங்களும் பதில்களும் வழங்கப்பட்டன.
சுங்கப் பணிப்பாளர் நாயகம் விமல் லியனகம, வருமான நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கல் அலுவலகத்தின் (RARMB) பணிப்பாளர் டபிள்யூ. எல். சி. திலகரத்ன மற்றும் LankaSign நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர் நளக்க விஜேநாயக்க ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.
நிதி அமைச்சின் மேலதிக செயலாளர் டி. எச். எஸ். புள்ளெபெரும, இலங்கை வர்த்தகச் சபையின் பிரதிநிதிகள், அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார செயற்பாட்டாளர்கள் (AEO), LankaSign நிறுவன அதிகாரிகள், சுங்கத் தரகர்கள், வருமான நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கல் அலுவலக அதிகாரிகள், ஜனாதிபதி செயலகப் பிரதிநிதிகள் மற்றும் உள்நாட்டு இறக்குமதி, ஏற்றுமதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
