குவைத் மற்றும் ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை இலக்கு வைத்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளது.
ஈரானின் கெஷ்ம் தீவில் அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானிய புரட்சிக்கர காவல் படை தெரிவித்துள்ளது.
கெஷ்ம் தீவில் உள்ள ஒரு கட்டிடம் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய குண்டுவீச்சில் கணவன், மனைவி மற்றும் அவர்களின் இரண்டு வயது குழந்தை உயிரிழந்தனர்.
ஜஞ்சான் மாகாணத்தில் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் புரட்சிக்கர காவல்படையின் மூன்று உறுப்பினர்கள் கொல்லப்பட்டதை ஈரான் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஈரானின் பல பகுதிகளில் அமெரிக்கத் தாக்குதல்களால் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகப் பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், வடக்கு குவைத்தில் உள்ள சீன நிறுவனம் ஒன்றின் கட்டிடம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டதாக குவைத் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு குறித்து ஓமான் அதிகாரிகளுடன் தெஹ்ரானில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க, அமெரிக்க இலக்குகள் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் எதுவும் தமது நிலப்பரப்பில் இருந்து முன்னெடுக்கப்பட்டது என்பதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை என ஈராக் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்கள் மீது அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்தே ஈராக் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
