23 ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், இலங்கையின் வீரர் ருமேஷ் தரங்க ஈட்டி எறிதலில் 89.75 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்ற நீரஜ் சோப்ரா உள்ளிட்ட பல முன்னணி வீரர்களைப் பின் தள்ளி அவர் இந்த வெற்றியை ஈட்டியுள்ளார்.
கடந்த 2006ஆம் ஆண்டுக்குப் பிறகு, சரியாக 20 வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்குக் கிடைத்த பொதுநலவாயத் தங்கப் பதக்கம் இதுவாகும்.
மேலும், பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் மெய்வல்லுநர் பிரிவிலிருந்து இலங்கை வென்ற முதல் தங்கப் பதக்கம் என்ற வரலாற்றுச் சாதனையும் இதன் மூலம் பதிவாகியுள்ளது.
போட்டியின் ஆரம்பத்தில் சவால்களை எதிர்கொண்ட போதிலும், தனது இரண்டாவது முயற்சியில் அபார திறமையை வெளிப்படுத்திய ருமேஷ் தரங்க, உலக அரங்கில் இலங்கையின் தேசியக் கொடியைப் பறக்கவிட்டு நாட்டின் தேசியகீதத்தை இசைக்கச் செய்து ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
