கொழும்பு மாநகர சபையின் மேயர், வர்த்தக சங்கத்தின் அழைப்பை ஏற்று சனிக்கிழமை (1) காலை பசார் பகுதிகளுக்கு நேரில் விஜயம் செய்து அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் கள ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தில் மாநகர சபையின் உயர் அதிகாரிகள், உறுப்பினர்கள், வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது 5ஆம் குறுக்குத் தெரு, 4ஆம் குறுக்குத் தெரு, கெய்சர் வீதி (Keyzer Street) மற்றும் சந்தைப் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மேயருக்கு நேரில் காண்பிக்கப்பட்டன.
குறிப்பாக, கழிவுப் பொருட்களால் ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிற நடைமுறைச் சிக்கல்கள் குறித்து மேயரிடம் விளக்கமளிக்கப்பட்டதுடன், அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
வர்த்தகர்களின் கோரிக்கைகளை கவனமாகக் கேட்டறிந்த மேயர், முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இந்நிகழ்வை ஏற்பாடு செய்த மாநகர சபை உறுப்பினருக்கும், இதில் பங்கேற்று ஆதரவு வழங்கிய சங்க உறுப்பினர்கள் மற்றும் வர்த்தகப் பெருமக்களுக்கும் வர்த்தக சங்கம் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.
