இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இருநாட்டு பேச்சுகளின்போது மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இரு தரப்பினருக்கும் இடையிலான உயர்மட்டப் பேச்சுகளின்போது மீனவர் விவகாரம் முக்கிய இடம் பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.
மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான கோரிக்கைகளை மனிதாபிமான முறையில் அணுகுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விக்ரம் மிஸ்ரி தனது விஜயத்தின்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது டித்வா புயலுக்குப் பின்னரான மறுசீரமைப்பு பணிகளுக்காக இந்தியா வழங்கும் 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் திட்டம் உள்ளிட்ட கூட்டு அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், ரயில்வே திட்டங்களுக்காக 250 மில்லியன் டொலர் மற்றும் கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட முன்னுரிமைத் துறைகளுக்காக 100 மில்லியன் டொலர் மதிப்பிலான இரு இந்திய ரூபாய் கடன் உதவி ஒப்பந்தங்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கை மற்றும் ‘மகாசாகர்’ தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
