இந்தாண்டில் நேற்று (10) வரை இலங்கையில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 90,306 ஆக அதிகரித்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை டெங்கு நோயினால் 65 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த மாதத்தில் மாத்திரம் 29,973 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட ரீதியில் அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், அங்கு 19,204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 17,955 பேரும், கண்டி மாவட்டத்தில் 6,413 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 5,971 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 5,871 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்கள் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அவற்றை அகற்றுவதுடன், சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
