நாட்டின் ஆட்சியாளர்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் சில விடயங்கள் தொடர்பில் தர்மத்தின் வழியில் அநுசாசனங்களை வழங்கி, வாய்மொழியாகவும் எழுத்து மூலமாகவும் அறிவிப்பது முற்காலம் தொட்டே இடம்பெற்று வரும் ஒரு விடயமாகும் என மல்வத்து மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு அனுப்பப்படும் அறிவித்தல்களுக்குப் பதிலாக மகாநாயக்க தேரர்களுக்கு பதில் அனுப்புவது வழக்கமான நடைமுறையாக இருந்தபோதிலும், நீதிபதிகளின் சேவைக் காலத்தை நீடிப்பது தொடர்பாக மகாநாயக்க தேரர்கள் தமது நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்த போதிலும், குறித்த கடிதம் தொடர்பாக இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கப்பெறாமை கவலையளிக்கும் ஒரு நிலைமையாகும் என மல்வத்து மகா விகாரையின் மகாநாயக்க வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று புதன்கிழமை கண்டிக்கு வருகை தந்து, மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கோ அல்லது நாட்டின் ஆட்சியாளர்களுக்கோ கடிதம் ஒன்றினை அனுப்பினால், வழக்கமாக அக்கடிதம் கிடைத்தமைக்கான பதில் அனுப்பப்படும். இந்த நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதுப் பிரச்சினை தொடர்பாக முப்பீட மகாநாயக்க தேரர்களின் நிலைப்பாட்டைக் குறிப்பிட்டு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் இல்லை.
குறைந்தபட்சம் அக்கடிதம் கிடைத்ததா என்பது குறித்தேனும் எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. நாட்டில் ஏதேனும் பிரச்சினை ஏற்படும் போது, அது தொடர்பில் மகா சங்கத்தினர் நாட்டின் ஆட்சியாளர்களுக்கு தர்மத்தின் வழியில் அறிவுரை வழங்குவது மன்னர்களின் ஆட்சிக் காலத்திலிருந்தே இடம்பெற்று வரும் ஒன்றாகும். அறிவுரைகளையும் அநுசாசனங்களையும் வழங்குவது நாங்கள் வழக்கமாகச் செய்யும் ஒன்று.
ஆனால் தற்போது நடக்கும் விடயங்கள் எமக்கும் கேள்வியாக உள்ளது. மகாநாயக்க தேரர்களிடமிருந்து ஜனாதிபதிக்கு கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என சில பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் பாராளுமன்றத்தில் கூடக் கூறுவதை நாங்கள் கண்டோம்.
இதுவரை எந்தவொரு நபரும் எந்தவொரு முக்கியமான விடயதானத்திற்கும் நாட்டுக்குப் பொருத்தமான நிலையான கொள்கையை உருவாக்கவில்லை. சில விடயங்கள் தொடர்பில் கொள்கைகள் உருவாக்கப்படும் போது, அடுத்து வரும் அரசாங்கம் அவற்றை ரத்து செய்கிறது.
அதுதான் நிலைமை. நாடு எப்போதும் ஒரே இடத்தில் தான் நிற்கிறது. எந்தவொரு விடயம் தொடர்பிலும் நாட்டுக்குப் பொருத்தமான நிலையான கொள்கைகள் இல்லை. வருபவர்களும் உருவாக்குவதில்லை. தமக்குத் தேவையானவாறு, தமக்கு நன்மை பயக்கும் வகையிலேயே பணியாற்றுகிறார்கள். இவர்கள் யாரும் எதிர்க்கட்சியில் இருக்கும் போது கூறிய விடயங்களை ஆட்சிக்கு வந்த பின்னர் செய்வதில்லை மறந்து விடுகிறார்கள்.
இன்று இந்த நாட்டின் கல்வியைப் பார்த்தால் பல பிரச்சினைகள் உள்ளன. முற்காலத்தில் உயர்தரத்திற்கும் சாதாரண தரத்திற்கும் மட்டுமே மேலதிக வகுப்புகள் இருந்தன. இப்போது முதலாம் ஆண்டிலிருந்தே மேலதிக வகுப்புகள். ஒவ்வொரு புதருக்குப் பின்னாலும் மேலதிக வகுப்புகள். அதேபோல் எங்கும் பல்வேறு பல்கலைக்கழகங்கள். முற்காலத்தில் அரச பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன.
நாடும் உலகமும் மாறும்போது நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும் தான். ஆனால் நாட்டின் நாகரிகம், ஒழுக்கம், கலாச்சாரம் ஆகியவற்றை அழித்துக் கொண்டு செல்லக் கூடாது. இந்த கல்வி முறைகள் குறித்து சரியான ஒழுங்குமுறை அவசியம். இன்று அரச பாடசாலைகளில் உயர்வகுப்புகளுக்கு கற்பிக்கிறார்களா இல்லையா என்பது கூட எங்களுக்குத் தெரியாது.
தனியார் மேலதிக வகுப்புகளில் தான் பிள்ளைகள் இருக்கிறார்கள். இதற்கு எவ்வித ஒழுங்குமுறையும் இல்லை. அந்தப் பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் சில வேளைகளில் தனியார் மேலதிக வகுப்புகளில் கற்பிக்கிறார்கள் அதுதான் நிலைமை. நீண்டகாலமாகவே கல்வி முறையில் ஒரு குழப்பம் உள்ளது.
இன்று பிள்ளைகள் தகம்பாசல் (பௌத்த ஞாயிறு பாடசாலை) செல்வதில்லை. ஞாயிற்றுக்கிழமைகளிலும் தனியார் மேலதிக வகுப்புகள் இருப்பதால் தான். இவ்வளவு காலமாகப் பொறுப்புள்ளவர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறோம், ஞாயிற்றுக்கிழமைகளில் மேலதிக வகுப்புகள் தேவையில்லை என்று, அல்லது காலை வேளையில் தேவையில்லை என்று. எந்தவொரு அரசாங்கமும் அது குறித்து கவனம் செலுத்தவில்லை.
புதிய உலகத்திற்கு ஏற்ப கல்வி அவசியம் தான். ஆனால் ஒரு நாட்டிற்கும் நாட்டின் எதிர்கால சந்ததிக்கும் நற்பண்புகள், ஒழுக்கம், கலாச்சாரம், எமது பாரம்பரியம் மற்றும் பழக்கவழக்கங்கள் பற்றிய அறிவை வழங்க வேண்டும்.
