யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் இளவாலை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2021ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக 24 வருட சிறைத்தண்டனையும் , பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், நஷ்ட ஈட்டை வழங்க தவறின் மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (28) தீர்ப்பளித்தது.
இந்நிலையில் சனிக்கிழமை (29) திடீர் சுகவீனம் என கூறி கைதி சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை (30) மதியம் குறித்த கைதி வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
கைதி தப்பி சென்ற நிலையில் ,சிறைக்காவலர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் , யாழ்ப்பாண பொலிஸ் விசேட குழுவினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
