அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனையை உயர்நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட ஐவரடங்கிய நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன.
குறித்த அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி 67 மனுக்களும், நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்து 5 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, இந்த மனுக்கள் ஆரம்பத்தில் 502 ஆம் இலக்க நீதிமன்ற அறையிலேயே அழைக்கப்பட்டது.
எனினும், அந்த அறையில் போதிய இடவசதிகள் இல்லாத காரணத்தினால், அதனை 501 ஆம் இலக்க நீதிமன்ற அறைக்கு மாற்றுமாறு சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஐவரடங்கிய நீதியரசர்கள் ஆயம், மனுக்கள் மீதான பரிசீலனையை 501 ஆம் இலக்க நீதிமன்ற அறைக்கு மாற்றுவதற்குத் தீர்மானித்தது.
