‘எல் நினோ’ தாக்கத்தால் எதிர்காலத்தில் இலங்கையின் கடல் சூழலியல், மீன் வளம் மற்றும் மீன்பிடித் தொழில்துறையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை முன்கூட்டியே மதிப்பிடுவதற்கான தொடர் ஆய்வுகளை தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்படும் இந்த ஆய்வுகளில் கடல் நீரின் வெப்பநிலை, நீரோட்டங்கள், மீன் இனங்களின் பரவல் மற்றும் இடம்பெயர்வு, மீன் வளத்தின் அதிகரிப்பு மற்றும் குறைவு உள்ளிட்ட தரவுகள் தொடர்ச்சியாகச் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.
‘எல் நினோ’ காரணமாக கடல் சூழலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், மீன் உற்பத்தியில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் பவளப்பாறைகள் உள்ளிட்ட கடல் சூழலியல் கட்டமைப்புகளின் பாதிப்புகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
அதேவேளை, கடல் வளங்களில் ஏற்படும் மாற்றங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கக்கூடும் என்பதால், கடலோர சமூகங்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பிலும் ஆய்வுக் குழுக்கள் கவனம் செலுத்தி வருகின்றன.
தற்போதைய மீன் விலை உயர்வுக்கு ‘எல் நினோ’ காரணமல்ல என நாரா நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சனத் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது ‘எல் நினோ’ நிலைமை காணப்படுவதாக உறுதிப்படுத்தும் விஞ்ஞான ஆதாரங்கள் இதுவரை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
