தொலைதூரச் சேவைத் தனியார் பஸ்களில் பயணிகளினதும் சாரதிகளினதும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ஆகியோரின் ஆலோசனையின் பேரில், வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் ஒருங்கிணைப்பில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இத் திட்டத்தின் முதற்கட்டமாக கொழும்பு பஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்தில் வைத்து தொலைதூரத் தனியார் பஸ்களில் தொழில்நுட்பக் கருவிகளைப் பொருத்த நடவடிக்கை இன்று சனிக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்டது.City & Local Guides
முதற்கட்டமாக 10 பஸ்களில் இப் புதிய செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் பொருத்தப்படவுள்ளதுடன், அவற்றின் செயற்பாடுகள் மற்றும் வெற்றியைக் கண்காணித்த பின்னரே தீவு முழுவதும் இயங்கும் ஏனைய பஸ்களுக்கும் இத் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இத் தொழில்நுட்பம் சாரதிகளைக் குற்றவாளிகளாக்குவதைத் தவிர்த்து, பயணத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பஸ் உட்பகுதி மற்றும் சாரதியின் செயற்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிக்கும்.
பயணத்தின் போது சாரதிக்கு நித்திரை அல்லது சோர்வு ஏற்படுதல், தொலைபேசி பயன்பாடு மற்றும் ஆசனப் பட்டி அணியாமை போன்ற பாதுகாப்பற்ற செயல்கள் கண்டறியப்பட்டால், ‘குரல் செய்தி’ மூலம் உடனடி எச்சரிக்கை வழங்கப்படும்.
இப் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விபத்துகளைத் தவிர்த்துப் பாதுகாப்பான போக்குவரத்துச் சேவையை உறுதி செய்ய வழியேற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
