22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக ஒரு கட்சி நாட்டை உருவாக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (10) இடம்பெற்ற பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழான தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கான கால அட்டவணையை அரசாங்கம் தயாரித்துள்ளது. ஆனால் இந்த திருத்தமானது நீதித்துறை சுயாதீனத்தின் மீதான மரண அடியாகும்.
நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்கும், மக்களின் மனித உரிமைகளை மீறும் மிகவும் கடுமையான ஜனநாயக விரோத செயற்பாடாகவே இது இருக்கின்றது. இந்தத் திருத்தத்தின் ஊடாக மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காது. வறுமை அதிகரிப்பதற்கும் வேலையின்மை கூடுவதற்கும் இது எந்தத் தீர்வையும் பெற்றுத் தராது.
உண்மையில் இவை எதுவும் நடக்காது. ஒன்றே ஒன்றுதான் நடக்கும். நாட்டில் ஒரு கட்சி ஆட்சியே உருவாகும். ஒரே கட்சி நாட்டை ஆளும், அரச துறையை கட்டுப்படுத்தும் தனிக் கட்சி ஆட்சியை உருவாக்கும் ஆரம்பகட்ட நடவடிக்கையே இதுவாகும்.
இதனை நாங்கள் நிச்சயமாக நிராகரிப்பதுடன், இதனை எதிர்ப்போம். இதற்காக நாட்டு மக்களை அணிதிரட்டுவோம் என குறிப்பிட்டார்.
