முகநூல் ஊடாக ஒழுங்கமைக்கப்படும் களியாட்ட விருந்துகள் மற்றும் அவை நடைபெறும் இடங்களைக் கண்டறிந்து கண்காணிப்பதற்காக பொலிஸ் மாஅதிபரின் பணிப்புரைக்கு அமைய விசேட புலனாய்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முகநூல் ஊடாக ஒழுங்கமைக்கப்படும் களியாட்ட விருந்துகள் மூலம் இளைஞர், யுவதிகள் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் போதைப்பொருள் வர்த்தக வலையமைப்பில் சிக்கிக்கொள்வதையும் தடுப்பதை நோக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்நடவடிக்கைக்கு அமைய அண்மையில் தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முகநூல் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட விருந்தொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், 41 இளைஞர், யுவதிகளைக் கைது செய்திருந்தனர்.
சட்டவிரோத போதைப்பொருள் வலையமைப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களால் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு இவ்வாறான விருந்துகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
முகநூல் களியாட்ட விருந்து என்ற போர்வையில் இளைஞர்களும் போதைப்பொருள் பாவனைக்கு தூண்டப்படுகின்றனர். ஆகையால் பெற்றோர் தமது பிள்ளைகளின் பேச்சு, நடத்தை மற்றும் வெளியிடங்களுக்கு பயணிப்பது போன்றன குறித்து விழிப்புடன் இருப்பது அவசியம்.
போதைப்பொருள் இன்மையால் ஏற்பட்ட மனப் பாதிப்பு காரணமாக கடந்த வருடம் மாத்திரம் 175 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அவர்களில் 172 பேர் ஆண்கள் எனவும் 3 பேர் பெண்கள் எனவும் தரவுகள் தெரிவிக்கின்றன. அத்தோடு 2026ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியினுள் அவ்வாறு 11 மரணங்கள் பதிவாகியுள்ளன என்றார்.சமூக குழுக்களில் இணையுங்கள்
