நுவரெலியா மாவட்டத்தில் சனிக்கிழமை (19) முதல் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வருவதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்மழையினால் இன்று (20) காலை நிலைவரப்படி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது.
அதேவேளை, பிரதான வீதிகளில் நிலவும் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக வாகனப் போக்குவரத்தும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கலகல, பிட்டவல, கினிகத்தேனை, தியகல, வட்டவளை, ஹட்டன் ஆகிய பகுதிகளிலும், ஹட்டன் – நுவரெலியா வீதியின் குடாகம, கொட்டகலை, சென் கிளேர், தலவாக்கலை, ரதல்ல மற்றும் நானுஓயா போன்ற பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் காணப்படுகின்றது.
இதனால், முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு, குறைந்த வேகத்துடனும் போதிய இடைவெளியுடனும் பாதுகாப்பாக வாகனங்களைச் செலுத்துமாறு சாரதிகளுக்குப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, பலத்த காற்று காரணமாக மரங்களும் கிளைகளும் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்துள்ளதால், மாவட்டத்தின் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இதனால் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
